Monday, April 12, 2010

தூண் சரிந்தது

ஜனநாயகம் உருவானபோது அதற்கு மூன்று தூண்கள்தான் இருந்தது. பிறகு ஜனநாயகத்தில் பத்திரிக்கைகளுக்கு உள்ள பங்களிப்பை பார்த்து (அல்லது அதற்கு பயந்து) அதை நாலாவது தூணாக ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அந்த தூணின் நிலை என்ன? அழையாத விருந்தாளியாக சானியா மிர்சா திருமண நிகழ்ச்சியில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அந்தோ பரிதாபம். சானியா இவர்களுக்கு அல்வா கொடுத்துவிட்டு ஹோட்டலின் உள்வழியாக பக்கத்து கட்டிடத்துக்கு சென்றுவிட்டார்கள். இவர்கள் வாசலில் காத்து கிடக்கிறார்கள், மறுநாள் தலைப்பு செய்திக்காக. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல அவர்கள் சானியா காரின் பின்னே திருமணம் நடக்க இருக்கும் ஹோட்டலை கண்டுபிடிக்க ஓடியது உச்சகட்ட காட்சி.

சமீபமாக, தேர்தலுக்காக பணம் கொடுத்து எழுதப்பட்ட செய்திகள் சூடாக பேசப்பட்டு வருகிறது. இப்படி பல காரணங்களால் இந்த தூண் கொஞ்சகொஞ்சமாக இடிந்து சிதிலமடைந்து விட்டது.

இப்போதெல்லாம் பத்திரிக்கைகளை படித்து பொது அறிவு வளர்த்துகொள்வதெல்லாம் சாத்தியமில்லை. கொலை, கொள்ளை மற்றும் சட்ட விரோத செயல்கள் பற்றிய செய்திகள் தான் பிரதான இடத்தை பிடித்துள்ளன. அறிவு, தொழிற்நுட்பம் சார் செய்திகள் மிகவும் குறைந்த இடத்தையே பிடிக்கின்றன. ஆன்மிகம் மற்றும் சமூக விஷயங்கள் காணாமல் போய்விட்டது. கிசு கிசு மற்றும் சினிமா சம்பந்தபட்ட செய்திக்கு சிறப்பு அந்தஸ்து. இதற்கு இவர்கள் குறை சொல்வது வாசகர்களை. ஆனால் தரத்தை விரும்பும் வாசகர்கள் அதிகமாகவே உண்டு.

அரசு வெளிநாட்டு பத்திரிக்கைகளை இந்தியாவில் அனுமதிக்க கூடாது என்று பத்திரிக்கைகள் போர்க்கொடி தூக்குகின்றன. ஆனால், நமது பணி தரமாக இருந்தால் எந்த போட்டிக்கும் நாம் அஞ்சத்தேவை இல்லை. ஆகவே, இதுபோல கவர்ச்சியை தேடி ஓடாமல் பத்திரிகைகள் பொறுப்புணர்ந்து செயல்படவேண்டும். இல்லை என்றால் அவை காணமல் போய்விடும்.

1 comment:

  1. அடப் போங்க சார்... இந்த தூண் சரிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது... எல்லாமே வியாபாரம் என்றாகிவிட்ட பிறகு இவர்களிடம் வேறு என்ன எதிர் பார்த்து விடமுடியும்? எப்போது 24 மணி நேர செய்தி சேனல்கள் வந்ததோ அப்போதே ஊடகத்தின் தரம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது! இப்போது எந்த ஊடகமும் நாங்கள் நடு நிலைமையாக செய்தி வெளி இடுகிறோம் என்று தங்கள் மன சாட்சியை(அப்படி ஒன்று இருந்தால்) தொட்டு சொல்ல முடியுமா? ஆதங்கப் படுவதைத் தவிர வேறு வழி இல்லை!

    ReplyDelete