Saturday, March 13, 2010

சட்டமா தர்மமா?

இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா? முதல் பார்வைக்கு ஒன்றாக இருக்கும் இவை ஆழ்ந்து நோக்கினால் ஒரு சிறு வித்தியாசம் தெரியும். சரி இந்த விளையாட்டு எதற்கு? எல்லாம் இந்த நித்யானந்தா விளையாடிய விளையாட்டு தான் காரணம். மீண்டும் மீண்டும் நித்யானந்தாவா என்று நினைக்க வேண்டாம். நான் சொல்ல வருவது நல்ல விஷயம் தான்.

இப்போதைய சர்ச்சை நித்யானந்தா சொல்லிய “நான் சட்டப்படி எந்த தப்பும் செய்யவில்லை” என்பதுதான். இங்கேதான் என் தலைப்புக் கேள்வி வருகிறது. இங்கே பார்க்கவேண்டியது சட்டமா தர்மமா?

இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? மனதை சாட்சியாக வைத்து செயல்படுவது தர்மம். ஆனால் எங்கெல்லாம் தர்மம் மறைகின்றதோ அங்கே சட்டம் தலையெடுக்கிறது. ஏனென்றால் மனசாட்சி என்பது செல்லாக் காசாகி விட்டது. ஆகையால் இப்போது சமுகத்திற்கு ஏதாவது ஒரு வரையறை தேவைபடுகிறது. ஆனால் மனசாட்சியை ஏற்றுகொள்ளவும் தயாராய் இல்லை.

சட்டம் இருக்கும் போது எதற்கு தர்மம்? இதற்கு தர்மம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக நாம் வாழும் வாழ்க்கையில் அல்லது தொழிலில் ஒரு தருமத்தை கைக்கொள்ளவேண்டும். ஏனென்றால் எல்லாவற்றவையும் நாம் சட்டத்தில் அடக்குவது என்பது சாத்தியமில்லை.

ஒரு உணவகத்தில் சமையல் செய்பவருக்கு என்று சில தர்மங்கள் உள்ளன. அவர் சமைக்கும் முன் தன் கரங்களை சுத்தப்படுத்திக்கொண்டுதான் உணவை தயாரிப்பார் என்று நம்பித்தான் எல்லோரும் சாப்பிடச் செல்வோம். ஆனால் அவர் அந்த தர்மத்தை மீறி மிகவும் அருவருக்கத்தக்க செயல்களை செய்துகொண்டு சமையல் செய்தால் நாம் எப்படி உணர்வோம்? அதற்காக கையை உபயோகப்படுத்தும் முறைக்காக ஒரு சட்டம் இயற்ற முடியுமா? இதேபோல் எத்தனை சட்டங்கள் இயற்றுவது? ஆக இதற்கு ஒரே வழி அவரவர் சில தர்மங்களைக் கடைபிடிப்பதுதான்.

அப்படி பார்க்கும் போது ஒரு சந்நியாசி கடைபிடிக்கும் தர்மம் என்ன? பொதுவாக ஒரு சந்நியாசி மேற்கொள்ளும் வாழ்க்கை எல்லோரும் ஏற்றுக்கொள்ள தயங்கும் அல்லது மறுக்கும் வாழ்க்கை. ஏன்னென்றால் அது அவ்வளவு கடினமானது. சந்நியாசிகளின் உண்மையான உணவு முறை மிகவும் கடினமானது. அவர்கள் எந்த உணவையும் ரசிப்பதில்லை. ஒரு ஜீவன் அர்ப்பணமாக செய்வார்கள்.

ஆனால் அதன் மூலம அவர்களுக்கு கிடைக்கும் ஞானம் சாதாரண மக்களுக்கு கிடைப்பதில்லை. அந்த ஞானத்தின் மூலம் அவர்கள் மக்களை முறைப்படுத்தி அவர்கள் வாழும் வாழ்க்கையின் அர்த்தத்தை புரிய வைத்து நெறிப்படுத்துவர். உண்மையில் அவர்கள் தேவர்களும் அல்ல மனிதர்களும் அல்ல. அவர்கள் ஒரு தேவதூதர்கள்.

சரி விஷயத்திற்கு வருவோம். இங்கே நாம் பார்க்க வேண்டியது தர்மதத்தைதான். சட்டப்படி நித்யானந்தா செய்தது சரியாக இருக்கலாம். ஆனால் தர்மப்படி அது தப்பு. அதுவும் குறிப்பாக அவர் மேற்கொண்ட வாழ்க்கையில் தர்மத்திற்குதான் அதிக முக்கியத்துவம் தரவேண்டும். மற்றவர்கள் சட்டத்தை கையிலெடுத்தாலும் பரவாயில்லை. ஆனால் நித்யானந்தா அப்படி செய்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

நித்யானந்தா, ஒரு சந்நியாசி ஒழுக வேண்டிய ஒழுக்கத்தை ஒழுகாததால், தர்மத்தை கைவிட்டதால் சட்டத்தை கைக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. ஏற்கனவே மூன்றாம் பத்தியில் சொன்னது போல் “எங்கெல்லாம் தர்மம் மறைகின்றதோ அங்கே சட்டம் தலையெடுக்கிறது”. ஒரு சந்நியாசிக்கு சொத்து, சொந்தம், பந்தம் ஏற்பட்டால் இந்த நிலைமையை அடைய நேரிடும்.

இதை மக்கள் ஆதரிப்பது ஒரு தவறான மனநிலையைக் காட்டுகிறது. இது ஒரு சமுக சீர்கேட்டின் முன்னோடி. இது தவறை விட தவறானது. இந்த எண்ணம் மேலும் பல தவறை செய்யத்துண்டும். பிறகு சட்டத்தை நாடும். நம் வாழ்கையில் நம் சம்பந்தபட்ட விஷயத்தில் யாராவது தர்மத்தை தவறினால் கோபப்படுகிறோம். ஆனால் பல நேரங்களில் நாம் தர்மத்தை மறந்து விடுகிறோம்.

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும். பின் தர்மமே வெல்லும்.
அதன் பின் அவர்களை காவல்துறை கவ்வும் (என்று நம்புவோம்).

2 comments:

  1. வருக! வருக! முதன் முதலாக வலைப்பதிவை தொடங்கி இருக்கிறீர்கள்! முதல் பதிவே சூடான அதே சமயத்தில் தேவையானப் பதிவைப் போட்டு இருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்! தொடர்ந்து பதிவுகளை இட நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
    நீங்கள் சொல்லியது சரிதான்... சட்டத்தை காரணம் காட்டி இந்த சாமியார் செய்திருப்பதை எந்த மன சாட்சி உள்ளவரும் ஏற்க மாட்டார்கள்! காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

    ReplyDelete
  2. மோகன் அவர்களே
    தங்கள் வாழ்த்துக்கும் வரவேற்புக்கும் நன்றி.

    ReplyDelete